Friday, April 27, 2012

கடவுள் பார்க்கிறார்!


ஒரு நர்சரி பள்ளியில் பழங்கள் மற்றும் விதவிதமான இனிப்புகளை வைத்து கண்காட்சி நடந்தது. சுட்டிகள் வரிசையாகச் சென்று பார்த்தார்கள். ஓர் இடத்தில், கூடை நிறைய ஆப்பிள்கள் இருந்தன. "ஒன்றுக்கு மேல் எடுக்கக் கூடாது. கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்றும் எழுதி இருந்தது.


சுட்டிகளும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்கள். சற்றுத் தொலைவில், ஒரு பெட்டி முழுவதும் மிட்டாய்கள் இருந்தன. அதைப் பார்த்த ஒரு சுட்டி, ஒரு தாளில் எதையோ எழுதி, பெட்டியின் மீது ஒட்டினாள். அதைப் பார்த்த மற்ற சுட்டிகள் சிரித்துக்கொண்டார்கள். அப்படி என்ன எழுதினாள் அந்த சுட்டி?

"எத்தனை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்!".

நாம் இருவரும் தோழர்களே........

"உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால் 
நாம் இருவரும் தோழர்களே........ "- சேகுவாரா

ஒரு துளியின் ஏக்கம்!

ஒரு துளியின் ஏக்கம்!



கருமேகத்தில் இருந்து, இரண்டு மழைத் துளிகள், பூமியை நோக்கி வரும்போது பேசிக் கொண்டன.
"நாம் எங்கே விழுவோம்? நமக்கு ஏற்ற இடமாக இருக்குமா?" என்றது ஒரு மழைத்துளி.
"எந்த இடமாக இருந்தால் என்ன? செல்லும் இடத்துக்கு ஏற்றவாறு பயன் தருவோம்" என்றது இரண்டாவது மழைத்துளி.
"ஒரு வேளை சூடான பாலைவனத்தில் விழுந்துவிட்டால், ஆவியாகி விடுவோமே. இல்லை குப்பையில் விழுந்தால் என்ன பயன்?" என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது கடல் அதன் கண்ணில் பட்டது. "ஆ! கடலா... கோடிக்கணக்கான நீர்த்துளிகளுடன் நாமும் கலந்து உப்பாகிவிடுவோம். மேகத்தைவிட்டு வெளியே வராமலேயே இருந்திருக் கலாம்" என்று புலம்பியது அந்தத் துளி.
பயத்துடன் கடலுக்குள் சென்று விழுந்தது. அப்போது, ஒரு சிப்பி வாயைத் திறந்தபடி அந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்டது. அடுத்த நிமிடம் சிப்பி மூடிக்கொண்டது.
நாட்கள் கழிந்தன. அது ஒரு முத்தாக மாறிப் போனது. பக்கத்திலேயே இன்னொரு சிப்பிக்குள் இருந்த முத்து பேசியது. அது இரண்டாவது மழைத்துளி. "பார்த்தாயா? மேகத்திலேயே இருந்தால், முத்தாக மாறி இருக்க முடியாது" என்றது.

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!


ஒருமுறை கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.



தண்டவாளத்தில் கருங்கல் ஜல்லி

தண்டவாளத்தின் அடியில் கருங்கல் ஜல்லி போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்... அது ஏன் தெரியுமா?

ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தப்படும் கருங்கல் ஜல்லிகளுக்கு 'பாலஸ்ட்' என்று பெயர். இந்த கருங்கற்கள் குஷன் மாதிரி செயல்பட்டு, ரயிலின் அதிர்வுகளை உள்ளிழுத்துக் கொள்ளும். இதனால் அதிர்வுகள் அடங்கிவிடும். கருங்கற்கள் இல்லாவிட்டால் அதிர்வுகள் பரவி தண்டவாளங்களிலும், அருகிலிருக்கும் கட்டிடங்களிலும் விரிசல் ஏற்படச் செய்யும்.



Wednesday, April 18, 2012

நீ என் நண்பன்டா!







உயிர் காக்கும் தோழன்டா! 
நான் போகுமிடமெல்லாம்
கூடவே வரும் காவலன்டா!
அதனால்தான் உன்னை
தலையில்வைத்து தாங்குகிறேன்.
கிரீடமாய் உன்னை அணியும்போது
மாமன்னனாய் மகிழ்ந்துப்போகிறேன்
ஒ....தலைக்கவசமே!
ஆனால் அதுவோ....


“சும்மா புருடா விடாதே
போலீசாரிடம் நூறு ரூபாய்
பறிபோய்விடும் என்ற பயத்தில்
என்னை அணிகிறாய்” என்றது.



நன்றி:பரிதி முத்துராசன்

எப்படி வந்து வாக்களித்தார்?




இருக்கும் எனக்கே
வாக்காளர் பட்டியலில்
வாக்கு இல்லை
இறந்துபோன என் தாத்தா
எப்படிவந்து வாக்களித்தார்?


நன்றி:பரிதி முத்துராசன்

Sunday, April 1, 2012

வேகம்



குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.


"தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?" என்று கேட்டான்.
"வருமே..." என்றான் சிறுவன்.


"போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?"
"மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்" என்றான்.


சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். "என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?" என்று கேட்டான்.


"போய்த்தான் பாருங்களேன்" என்று சிறுவன் சொன்னதும்,  அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான். சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.   வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.