Saturday, October 20, 2012

பார்வை


எதிர் இருக்கைப் பயணி
சேகுவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என் மீதும் - அவன்
சூட்கேஸ் மீதும்!

- பாப்பு
(விகடன் - 08.09.10)

விலையேற்றம்


தமிழக முதல்வராக காமராஜர் ஆட்சி செய்த காலம் அது!

இரண்டு பஸ் கம்பெனி முதலாளிகள், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, காமராஜரைப் பார்க்க வந்திருந்தனர். 'ஐயா! தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளன. கம்பெனியை நடத்துவதில் லாபமும் அதிகம் இல்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்துங்கள்'' என்றனர்.

''சரி... உங்க கம்பெனியோட பேர் என்ன? '' - என்று கேட்டார் காமராஜர். உடனே ஒருவர் '...டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ்' என்றார்; மற்றொருவர், ''... பஸ் சர்வீஸஸ்'' என்றார்.

இதைக் கேட்டதும், ''சர்வீஸ்னு பேரு வைச்சுருக்கீங்களே... இதுக்கு என்ன அர்த்தம்? தமிழ்ல சேவைன்னு சொல்லுவோம்; சேவைன்னா எந்த லாப நோக்கமும் இல்லாம, மத்தவங்களுக்கு உதவறதுதானே? உங்ககிட்ட பஸ் தயாரிக்க வசதி இருக்கு. அந்த வசதிய பொதுமக்களோட வசதிக்கு பயன்படுத்துங்க. அதுதான் உண்மையான சேவை! அதைவிட்டுட்டு, லாபம் குறையுதேன்னு புலம்பாதீங்க!'' என்று அவர்களை வழியனுப்பி வைத்தாராம் காமராஜர்.

நாங்கள் குதிரைகள்!


டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர், ''ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இந்தியர்கள் அப்படி இல்லை, பல நிறங்களில் இருக்கின்றனர்!'' என்றார் ஏளனத்துடன்.

சற்றும் தாமதிக்காமல் பதிலடி கொடுத்தார் ராதா கிருஷ்ணன்: ''கழுதைகள் ஒரே நிறத்தில்தான் இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் இருக்கும்!''

பிறகென்ன... தலை குனிந்தபடியே வெளி யேறினாராம் அந்த ஆங்கிலேயர்!

இப்படியும் ஒருவர்!


ஒருமுறை... காமராஜரின் தாயார், தன் மகனுக்குக் கடிதம் எழுதினார். அதில், 'மாதா மாதம் நீ அனுப்பும் 50 ரூபாய் எனக்குப் போதவில்லை. விலைவாசி ஏறிக் கிடப்பதால், இன்னும் 10 ரூபாய் சேர்த்து அனுப்பு' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப் படித்த காமராஜர் இப்படி பதில் எழுதினார்: 'உங்களுக்கு 10 ரூபாய் அதிகமாக அனுப்ப வேண்டும் என்றால், பாலமந்திரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்தில் 10 ரூபாயைக் குறைக்க வேண்டியிருக்கும். அது கூடாது. எனவே நீங்கள், 50 ரூபாய்க்குள் சமாளித்துக் கொள்ளுங்கள்!'

Photo: இப்படியும் ஒருவர்!